Wednesday, October 3rd, 2007...2:05 pm
கியூபாவின் மனிதாபிமானம்
Jump to Comments
சே குவாரா பற்றி தெரிந்திராதவர்கள் இருக்க முடியாது, அர்ஜென்டினாவில் பிறந்திருந்தாலும் கியூப நாட்டு புரட்சியில் ஈடுபட்டு அந்நாட்டில் சோசியலிச ஆட்சி அமைய காரணமானவர்களில் முக்கியமானவர். காங்கோ, பொலிவியா போன்ற நாடுகளிலும் சோசியலிச ஆட்சி அமைய வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு அந்நாடுகளுக்குச் சென்று போராடியவர். அப்படி பொலிவியாவில் 1967ஆம் வருடம் போராடிக் கொண்டிருந்த சே குவாராவை பொலிவிய ராணுவம் அமெரிக்க உளவு நிறுவனத்தின் உதவியுடன் சுட்டுக்கொன்றது. ‘சே’வை தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பொலிவிய ராணுவ வீரரான மரியோ டெரான் இப்போது சென்ற வருடம் முதியவராக கண்பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் பொலிவியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அந்த மருத்துவமனை கியூப அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது! கியூபாவில் மாபெரும் தேசத் தலைவராக போற்றப்படுபவர் சே குவாரா. அந்த ‘சே’வைக் கொன்றவருக்கே சிகிச்சையளித்து கண் பார்வை அளித்திருக்கின்றனர் கியூப நாட்டு மருத்துவர்கள்!
கியூபாவை மனிதாபிமானமுள்ள மக்கள் கொண்ட நாடு என்று நான் கருதுவதற்கு சில நாட்களுக்கு முன் நான் பார்த்த சிக்கோ (Sicko) எனும் ஆவணப்படமும் ஒரு காரணம். அமெரிக்க (USA) நாட்டில் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் நன்மையை துளியும் கருத்தில் கொள்ளாமல் எப்படி தங்கள் வியாபார லாபங்களையே ஒரே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன என்பதை விளக்கும் படம். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க் World Trade Centerல் நடந்த விமானத்தாக்குதல்கள் நினைவிருக்கலாம். கட்டிடம் தாக்கப்பட்ட பிறகு பல தன்னார்வலர்கள், தீயனைப்புத் துறையினர், போன்றோர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு தொண்டு செய்தனர். இடிபாடுகள், நச்சுப்புகை போன்றவற்றின் மத்தியிலும் மாசு நிறைந்த சூழல்களிலும் தன்னலம் பாராமல் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் இவர்களில் பலர் இன்று உடல்நிலை பாதித்து அவதிப்படுகின்றனர். ஆனால் அமெரிக்க அரசாங்கமும் இவர்களை கண்டு கொள்ளவில்லை, தங்கள் லாபத்தையே ஒரே குறிக்கோளாக கருதும் காப்பீட்டு நிறுவனங்களும் இவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. இந்நிலையில் சிக்கோ பட இயக்குனர் இந்த தொண்டர்களை ஒரு படகில் ஏற்றி கியூபா நாட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அமெரிக்க ஆட்சியாளர்கள் தங்கள் முதல் எதிரியாக கியூபாவையும் அந்நாட்டை ஆட்சி செய்யும் பிடல் காஸ்ட்ரோவையும் கருதுவது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அத்தகைய அமெரிக்காவிலிருந்து வந்திருந்தாலும் இந்த 9/11 வீரர்களுக்கு கியூபாவின் மிகப்பெரிய மருத்துவமனையில் இலவசமாக முதல் தர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மிகக் குறைந்த விலையில் மருந்துகள் வழங்கப்படுகின்றன, அதுமட்டுமில்லாமல், கியூப நாட்டின் தீயனைப்புத் துறையினர் இவர்களை தங்கள் அலுவலகத்திற்கு அழைத்து மரியாதை செய்து கௌரவப்படுத்துகின்றனர். “இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்.” என்றார் வள்ளுவர். கியூபாவில் சிகிச்சை எடுத்துக்கொண்ட இந்த அமெரிக்கப் பிரஜைகளின் முகத்தில் வள்ளுவர் குறிப்பிடும் அதே நாணத்தை காண முடிந்தது. அத்துடன், கியூபாவை எதிரி நாடு என்று சொல்லியே மூளைச்சலவை செய்த அமெரிக்க ஆட்சியாளர்கள் மேல் ஒரு ஆதங்கமும் அவர்கள் முகத்தில் தெரிந்தது.
நான் USAவின் எதிரியா? கியூபாவில் உள்ளது போன்ற ஆட்சிமுறை எல்லா நாடுகளிலும் அமைய வேண்டும் என்று நான் சொல்கிறேனா? இல்லை. கியூபாவின் சமத்துவத்தை பாராட்டும் அதே அளவு அமெரிக்காவின் சுதந்திர உணர்வையும் போற்றுகிறேன். உண்மையில் எனக்கு அமெரிக்க–கியூப அரசியல் சண்டைகள் பற்றி அவ்வளவாக தெரியாது, தெரிந்துகள்ளும் ஆர்வமும் கிடையாது. இடது சாரிகள், வலதுசாரிகள், கம்யூனிசவாதிகள், முதலாலித்துவவாதிகள் என்று பிரித்துப்பார்க்கவும் தெரியாது. இன்றைய உலகில் இரண்டே விதமான மனிதர்களை தான் நான் பார்க்கிறேன். மற்றவர்க்கு உதவி செய்வது முடிவில் தமக்கே உதவி செய்ததாகும் என்ற பேருண்மையை அறிந்த பக்குவப்பட்ட மனிதர்கள், இதை உணராமல் சுயநலமே சோறுபோடும் என்று முட்டாள்தனமாக நம்பி வாழ்ந்து சாகும் பக்குவப்படாத மனிதர்கள். எல்லா அரசியல் கட்சிகளிலும், எல்லா துறைகளிலும், எல்லா நாடுகளிலும் இந்த இரு வகையான மனிதர்களுமே இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அமெரிக்காவை விட கியூபாவிலேயே ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழும் பக்குவம் அதிகமாக உள்ளதாக எனக்கு தோன்றுகிறது. இல்லையானால், ஏழை நாடான கியூபா தன் எதிரி நாட்டு மக்களுக்குக் காட்டும் மனிதாபிமானத்தை ஏன் பொருளாதார வல்லரசான அமெரிக்கா தன் மக்களுக்கே, தாய் நாட்டுக்கு தொண்டு செய்த நல்ல உள்ளங்களுக்கே காட்ட முடிவதில்லை?
சே குவாராவின் ‘துப்பாக்கிப் புரட்சி’யை என்னால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஆனால் அவரது விடுதலை வேட்கையையும் மனிதாபிமானத்தையும் அவரது ‘The Motorcycle Diaries’ புத்தகத்தை படித்து அறிந்து வியந்திருக்கிறேன். அன்று ‘சே’ துப்பாக்கி கொண்டு பொலிவியாவில் சாதிக்க நினைத்ததை இன்று அவர் வழி வந்த கியூபா மனதாபிமானம் எனும் ஆயுதத்தைக் கொண்டு சாதித்திருக்கிறது! வாழ்க மனிதாபிமானம்!
பார்க்க: BBC NEWS: Cubans treat man who killed Che
4 Comments
மு.மயூரன்
October 3rd, 2007 at 3:41 pm
சே துப்பாக்கி தூக்கியிருக்கக்கூடாது என்று சொல்லும் உங்கள் அறியாமையைக் கண்டு மிகுந்த வேதனை அடைகிறேன்.
சேயும் பிடலும் அவர்தம் தோழர்களும் துப்பாக்கி ஏந்தியிராவிட்டால் இன்றைய கியூபா மலர்ந்திருக்காது.
அநியாயத்தை வன்முறை கொண்டுதான் அடித்து வீழ்த்த முடியும்.
அஹிம்சை பேசுபவர்கள் ஆபத்தானவர்கள். காந்தி போல.
bsubra
October 4th, 2007 at 7:57 am
என்னுடைய பதிவொன்று: காஸ்ட்ரோ கவுண்ட்-அப் « Snap Judgment
ஃபிடல் காஸ்ட்ரோவின் சொத்து $900 மில்லியனைத் தாண்டும்
ஸ்ரீநிவாசன்
October 4th, 2007 at 9:04 am
ஸ்ரீநிவாசன்
October 4th, 2007 at 3:04 pm
Conversations with God என்று ஒரு புத்தகம்… பெரிய பெரிய தத்துவம், ஆன்மீகம் எல்லாம் கிடையாது, நல்ல எழுத்து நடையுடன் சுவாரஸ்யமான கருத்துகள் கொண்ட புத்தகம். அப்புத்தகத்திலிருந்து சில வரிகள்…
…
இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை
Leave a Reply